Ads Top

ஸ்தலம்

சித்தஞ்சி சிவகாளினி சித்தர் பீடம் ஸ்தல வரலாறு



சக்தியுகத்தில் பல அசுரர்கள் தோன்றினர். அசுரர்கள் தேவர்களிடத்தில் யுத்தம் செய்து தேவலோகத்தைக் கைப்பற்ற எண்ணினர். பல அசுரர்கள் விஷ்ணுவாலும், சிவனாலும் அழிக்கப்பட்டனர். இதனால், கோபம்

அடைந்த காமகாசூரன் என்ற அசுரன் தன் குருவான சுக்ராச்சாரியாரின் யோசனையின்படி அடர்ந்த வனத்தில் பலநூறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்துவந்தான். தவத்தை மெச்சிய படைக்கும் கடவுளான பிரம்மதேவன் காமகாசூரன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார். காமகாசூரன் தனக்கு சாகாவரம் வேண்டும் என்று வேண்டினான். அதற்கு பிரம்மதேவன் தேவர்களாலோ, மும்மூர்த்திகளாலோ, ஆயுதங்களாலோ, வனவிலங்குகளாலோ உனக்கு அழிவு ஏற்படாது. உனக்கு பருவப்பெண்ணால் மரணம் நிகழும் என பிரம்மதேவன் வரம் அருளினார்.காமகாசூரன் அசுரப்படைகளைத் திரட்டி தானே ஈரேழு உலகுக்கும் அதிபதி என்று கூறி முடிசூட்டிக்கொண்டான். தேவலோகத்தில் போர் புரிந்து தேவலோகத்தைக் கைப்பற்றினான். தேவர்கள் செய்வது அறியாது அஞ்சி திக்கெட்டும் ஓடினார்கள். அசுரனின் ஆணவம் தலை தூக்கியது. அசுரப்படைகள் மனிதர்களையும், பெண்களையும், தெய்வ கன்னிகளையும் துன்புறுத்தினர். இயற்கைக்கு மாறான அதர்மங்களையும் செய்து வந்தான். ரிஷி முனிவர்களின் தவத்தை பாழ்படுத்தி வேள்விகளைத் தடுத்து தெய்வ ஆலயங்களை பாழ்படுத்தினான். காமகாசூரன் தானே தெய்வம் என்ற ஆணவத்தோடு ஆட்சி புரிந்து வந்தான். தேவர்கள் ரிஷி, யோகி யாவரும் ஒன்றுகூடி விஷ்ணுவிடம் அசுரனின் கொடுமைகளை முறையிட்டனர். விஷ்ணுவோ இந்த பிரச்சனைக்கு சிவனால் மட்டும் தீர்வு தரமுடியும் என்பதால் அவரிடம் சென்று முறையிடுங்கள் என்றார்.
கயிலாயத்தில் அன்னையும் பிதாவுமாக வீற்றிருக்கின்ற சிவனையும் பார்வதி தேவியையும் தேவர்களும், ரிஷிகளும் வணங்கி நின்று அசுரர்களால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கூறுகின்றனர். இதைக் கண்ணுற்ற ஈசனும் பார்வதி தேவியும் அசுரனின் துன்பங்களில் இருந்து உங்களைக் காப்போம் என்றனர். அசுரனின் அழிவிற்குத் தீர்வு கிடைக்கும் என்று கூறி வரம் அளிக்கின்றனர். தேவர்கள், ரிஷி, முனிவர்கள் அடர்ந்த வனத்தில் தஞ்சம் அடைந்து தவவாழ்க்கையை மேற்கொண்டனர். 
கயிலாயத்தில் ஈசன் திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். சிவனும் பார்வதியும் தாயம் என்கின்ற சொக்கட்டானை விளையாடினர். விளையாட்டாக அன்னை பார்வதி தான் தோல்வி அடைந்து விடுவோமோ ! என்று எண்ணி ஈசனின் இருவிழிகளையும் கைகளால் மறைக்கவே இந்த பிரபஞ்சம் முழுவதும் இருள் ஆனது. இதை உணர்ந்த அன்னை கரங்களை விலக்க இந்த பிரபஞ்சம் ஒளிமயமானது. இதனால் சினம் கொண்ட சிவன் சிறுகுழந்தை போல் என் விழிகளை மறைத்தாய். என் விழிகள் சூரியன், சந்திரன் என்று அறியவில்லையா ! இந்த பிரபஞ்சமானது உன்னால் துன்பம் அடைந்தது, இந்த துன்பத்திற்குக் காரணமான நீ ஐந்து வயது பெண்ணாக மாங்காடு வனத்தில் காத்தாயினி மகரிஷியின் வேள்வியாகத்தில் தோன்றி பருவப்பெண்ணாக வளர்ந்து என்னை தவம் புரிந்து என்னை அடைவாயாக ! என்று ஈசன் சாபம் அளிக்கிறார்.
ஈசனிடம் சாபம் பெற்ற அன்னை பலவாறாக அழுது வேண்டியதால் ஈசன், உன்னை மகளாகப் பெறவேண்டும் என்று காத்தாயினி மகரிஷி பல நூறு ஆண்டுகள் தவம் இருந்து வருகின்றார். அவரின் மகளாக பிறக்க வேண்டும் என்பது விதி. இந்தப் பிறப்பினால் அசுர சக்திகளை அழித்து உலகுக்கு ஒப்பற்ற தாயாக விளங்கி அருள்பாலிப்பாயாக என்றார். இச்சாபத்தின் நற்பலனை உணர்ந்து இப்பூவுலகைக் காத்திட தேவர்கள், ரிஷி, முனிவர்கள், மக்கள் படும் துன்பங்கள் நீங்கி அன்னை பார்வதி அக்னியில் ஐந்து வயதுடைய தெய்வகுழந்தையாக காத்தாயினி மகரிஷியின் வேள்வியில் தோன்றுகிறார். 
வேள்வியில் தோன்றிய தெய்வகுழந்தையை ஆரத்தழுவி காத்தாயினி மகரிஷி தன்னுடைய திருநாமத்தை குழந்தைக்குச் சூட்டுகிறார். காத்தாயினி சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகிறாள். பருவ வயதை அடைந்து சிவன் நாமமான நமசிவாய என்ற திருநாமத்தை அனுதினமும் ஜபித்து வருகின்றார். ஒரு நாள் வானில் அசரீரி ஒலித்தது, காத்தாயினியே ! நீ தெய்வப்பெண். ஈசனை மணந்திடவே இப்பிறவி எடுத்துள்ளாய். உன் தவம் பூர்த்தியடைந்திட மாங்காடு வனத்தை விட்டு மேற்கே சென்று அங்கு பாலாற்றின் வடகரையில் ஒற்றை
மாமரம், நான்கு சுவைகளை நான்கு மணங்களை கொண்ட ஒற்றை மாமரம் இருக்கும், அவ்விடத்தில் மணலால் லிங்கம் அமைத்து (தற்போது உள்ள ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்) ஈசனை குறித்து தவமிருந்தால் ஈசனின் தரிசனத்தையும் பெற்று மணகோலத்துடன் கயிலாயம் செல்வாய் என்று அசரீரி ஒலிக்கிறது. 
அன்னை காத்தாயினி மகரிஷியிடம் நடந்ததைக் கூறி தவம் புரிய வழிமுறைகளைத் தெரிந்துக்கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்படுகிறாள். காஞ்சியில் ஒற்றை மாமரத்தைக் கண்ட அன்னை அங்கு மணலால் லிங்கம் அமைத்து வழிபாட்டு ஆகமங்களைக் கடைபிடித்து ஈசனை இதயத்தில் நிலை நிறுத்தி நமச்சிவாய ஜெபமந்திரத்தை ஜெபித்து தன்னையே மறந்தவளாக தவம் செய்து வருகிறாள்.
இதைக்கண்ட நாரதர் தேவர்களையும் மக்களையும் காக்கும் தருணம் வந்து விட்டது என்று எண்ணினார். இத்தருணத்தை பயன்படுத்தி காமகாசூரனின் அரசவைக்கு நாரதர் விஜயம் செய்கிறார். அரசவையில் நுழைந்த நாரதர் அசுரனைக் கண்டு ஏளனமாக சிரிக்கின்றார். இதைக்கண்ட மற்ற அசுரர்களும் காமகாசூரனும் சினம் கொண்டனர். தனக்கு வரம் அளித்த பிரம்மதேவனின் மகன் என்பதால் நாரதரிடம் நகைப்புக்கு காரணம் என்னவென்று கேட்கிறார். அதற்கு நாரதர், அசுரனே உன்னைப் போல் ஒரு அசுரனை என் வாழ்நாளில் கண்டதில்லை.
உன்னைக் கண்டு தேவர்களே நடுங்குவர், மும்மூர்த்திகளும் ஒதுங்கி இருந்தனர். யாராலும் அழிக்க முடியாத பலம் பொருந்திய வரம் பெற்ற உனக்கு உன் சிம்மாசனத்தை அலங்கரிக்க மகாராணி இல்லையே என்று தான் எனக்கு சிரிப்பு வந்தது. நீ துணை இன்றி வாழ்வது ஏளனத்திற்கு உரியது என்று நாரதர் கூறினார். இதைக் கேட்டு காமகாசூரன் சினம் கொண்டாலும் நாரதரிடம் என் மனம் கவரும்படியான பெண்ணை இதுவரை கண்டதில்லை, சந்தித்ததும் இல்லை. என் தகுதிக்கும், ஆளுமைக்கும் ஏற்ற பெண் இருந்தால் கூறுங்கள் என்று கேட்கிறான் காமகாசூரன். நாரதரும் நான் தேசம் எங்கும் சுற்றி வந்து உள்ளேன், ஈரேழு லோகமும் சஞ்சாரம் செய்து உள்ளேன், தேவ கன்னிகைக்கு இல்லாத ஒரு தெய்வீக பேரொளியான அழகு பெண்ணை காஞ்சியின் பாலாற்றின் கரையில் கண்டேன். சௌந்தரியம், தெய்வீகத் தோற்றம், சர்வலட்சணம் கொண்ட கன்னியே உனக்கு ஏற்ற துணை என்று எண்ணினேன் என்று நாரதர் கூறுகிறார். நாரதரின் கலகத்தை உணராத அசுரன் அன்னை தவம் இருக்கும் இடத்திற்குச் செல்கிறான்.
வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையின் நடுவே பாலாற்றின் குளுமையோடு ஒற்றை மாமரத்தின் அடியில் தெய்வீக பேரொளியாக அன்னை தவம் இருக்கிறாள். காத்தாயினி தேவியைக் கண்ட நேரத்தில் அசுரன், இப்பெண்ணே தனக்கு துணை என்று எண்ணினான். காமகாசூரன் தேவியை நோக்கி பெண்ணே ! உன் தவத்தைக் கலைத்துவிட்டு என்னோடு வா என்று அழைக்கிறான். அசுரன் பலவாறு கூச்சலிட்டும், ஆர்பரித்தும் எதற்கும் செவிசாய்க்காமல் தவம் ஒன்றே தன் உயிர் என்றும் அன்னை தவத்தில் மூழ்கி இருந்தாள். தவத்தைச் சிதைக்க அசுரன் பாலாற்றில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தினான். மணல் லிங்கம் வெள்ளத்தால் கரைந்துவிடுமோ என்று அச்சம் கொண்ட காத்தாயினி தேவி தன் மார்போடு சிவலிங்கத்தை அரவணைத்து சிவனை வேண்டிட பெரு வெள்ளம் தணிகிறது.
இருந்தாலும் அசுரன் தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினான். அசுரனின் இச்செயலையும், பேச்சையும் கண்டு அசுரனை வதைக்கும் பொருட்டு காளியின் ரூபமாக மாறி ஏ அசுரனே ! நான் உலகுக்கே தாயானவள். ஈசனின் தேவி பார்வதி. நான் உன்னை அழித்து உலகைக் காக்க காத்தாயினி மகரிஷியின் அக்னியில் பிறந்து உன்னை அழிக்கவே வந்துள்ளேன். நீ எவரையேனும் வெற்றிக் கொண்டு இருக்கலாம். தேவாதி தேவர்களை அச்சம் அடைய செய்து இருக்கலாம். ஆனால், உன்னால் என்னை நெருங்கவும் முடியாது. என் தவத்தை தடுத்த உன்னை அழிப்பதே என் இலட்சியம் என்று அனல் பறக்கும் விழியோடு சூளுரைத்தாள் காத்தாயினி. அன்னையின் அழகை மட்டுமே கண்ணுற்ற காமகுணம் கொண்ட அசுரன் பருவப்பெண்ணால் தான் தனக்கு அழிவு என்பதை மறந்து தர்க்கம் செய்தான். இன்று பூரண அமாவாசை, உன்னிடத்தில் போர் புரிந்து உன்னை அழித்து உன் உதிரத்தினைக் குடித்து ஈசனை மணப்பேன் என்று அண்டசராசரம் நடுங்கச் செய்து அன்னை சபதம் செய்தாள்.
காஞ்சியின் மேற்கு எல்லையான சித்தஞ்சி பூமியில் தவம் இருந்த ரிஷி, முனிவர்கள் அன்னையின் வருகையால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தனர். உக்ரரூபமான பத்ரகாளியாக சினம் கொண்ட தேவி அசுரனிடம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் கடுமையாகப் போர் புரிகின்றாள். இரவு பகலாகப் போர் நடக்கிறது. பல ஆயுதங்களையும், பல ரூபங்களையும் எடுத்த காமகாசூரன் போர் புரியும் நாளே நவராத்திரி நாள் என்று அழைக்கிறோம். அன்னையானவள் தசமி திதி அன்று தன் சகோதரன் விஷ்ணுவை நினைத்து தியானம் செய்ய, எந்த ஆயுதங்களாலும், மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும் அசுரனுக்கு அழிவு இல்லை. அசுரனின் ரத்தத்துளிகளிலிருந்து புதிது புதிதாக அரக்கர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள், அவன் சிவரூபம் தரித்து உன்மதியை மயக்கி உன்னை அடைய வந்து கொண்டு இருக்கிறான். காமகாசூரனை மண்ணில் சாய்த்து அவன் மார்பில் உனது வலது பாதத்தின் கட்டை விரல் நகத்தால் அவன் தொண்டையைக் கிழித்து, உதிரத்தைக் குடித்து அவனை மரணம் அடையச் செய்வாயாக. வலது பாதத்தின் கட்டை விரல் நகமே உனக்கு ஆயுதம் என்று விஷ்ணு கூறினார். அதன்படி அன்னை காமகாசூரனை வீழ்த்தி உதிரத்தினைக் குடித்து உக்கிரக் கோலம் கொண்ட பத்ரகாளியாக விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து கர்ஜித்து நிற்கின்றாள். அன்னையின் பாதம் காமகாசூரன் மார்பில் பதிந்ததால் காமகாசூரன் தன் தவறை உணர்ந்தான். உலகத்துக்குத் தாயான அன்னையை அடைந்திட வந்த பாவி நானென்று கண்ணீரோடு கதறி கதறி அழுதான். காமகாசூரன் தனக்கு விமோசனம் அளிக்க வேண்டும் என்று அன்னையை வேண்டினான்.
கருணை வடிவமான அன்னை மனம் இரங்கி பத்ரகாளி தேவியாக திருக்காட்சி தருகிறாள். காம குணத்தை அழித்து மக்களுக்கு விமோசனம் தந்த காமாட்சி அன்னை என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். சித்தஞ்சி எல்லையில் தவமிருந்த சித்தர்களுக்கு அன்னை வரமும் அருள்கிறாள். காலம் கனியும் போது சித்தஞ்சி எல்லையில் சிவனோடு நான் சேர்ந்து சிவகாளினி என்ற திருநாமத்தோடு துன்பத்தால் அவதியுறும் மக்களின் துயரங்களை தீர்க்க சர்வ மங்கள ரூபிணியாக இவ்விடத்தில் வீற்றிருப்பேன் என்றும் வரம் அளிக்கின்றாள். 

Powered by Blogger.