தவத்திரு.சக்தி மோகனானந்த சுவாமிகள்
- தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள்
உலகம் முழுவதும் பல புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. அதில் ஒரு அமைதியான, சக்திவாய்ந்த தெய்வீக ஸ்தலம் தான் “சித்தஞ்சி சிவகாளினி சித்தர் பீடம்”. இந்த இடம் சிவகாளினி தேவி அவரது பக்தர்களுக்கு அருள் நல்கிய தெய்வீக இடமாகும். சிவகாளி தேவிக்கு, உலக அளவில் சிறப்பு வாய்ந்த ஒரே கோவில் இதுவே ! இத்தலம், தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் (சென்னை - பெங்களூர்) சஏ-4 தேசிய நெடுஞ்சாலையில், மற்றும் ஓச்சேரி சப்தகிரி பொறியியல் கல்லூரிக்கு அடுத்த சித்தஞ்சி கிராமத்தில், தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது.
தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள், தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தில், பெற்றோர்கள் திரு. ஜெயமூர்த்தி - திருமதி இந்திராணி அம்மாள் ஆகியோருக்கு 1981-ஆம் ஆண்டில் ஆடி மாதம் (02-08-1981), பூரம் நட்சத்திரத்தில், ஸ்ரீ பத்ரகாளி அம்மனின் திருஅருள் மூலம் பிறந்தார். அந்த நாள் சிவகாளினி தேவி, பூரம் நட்சத்திரத்தில் பூலோகத்தில் அவதரித்த திருநாள் ஆகும். மேலும், அவரது பிறப்பு முதல் சிவகாளினி தேவியின் திருவுருவம் போன்ற மச்ச உருவம், அவரது வலது முழங்காலில் உள்ளது. அவர் அன்பு, அமைதி, கருணையின் திருவுருவமாகவும், சிவகாளினி தேவியின் தெய்வீக சக்தியின் அடையாளமாகவும் சிறந்து விளங்குகிறார்.
அவர் தனது 16-வது வயதின் போது, 1997-இல் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, அவரது ஆன்மீக வாழ்க்கையில் ஒரு அற்புதமான பொன் நாள். அந்த நாளில், சிவகாளினி தேவி அவரது கனவில் தோன்றினார்.
கனவில் தோன்றி சிவகாளிளி அன்னை அவரிடம் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும், இரவு பகல் என பாராமல் தொடர்ச்சியாக 48 நாட்கள் மயானத்தில் தன்னை நினைத்து தவம் மேற்கொள்ளுமாறு கூறி மறைந்தார். தூக்கம் கலைந்தவுடன், அவர் எழுந்து சிவகாளினி தேவி பூஜை அறைக்கு ஓடி சென்று, அன்னைக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார். பின்னர் தவம் செய்ய பொருத்தமான மயானத்தை தேடினார். இறுதியாக தன் தாயின் கிராமத்தில் அமைந்துள்ள மயானத்தில், 48 நாட்கள் தொடர்ந்து தவம் செய்தார். சுவாமிஜி அவர்கள் மயானத்தில் தவம் செய்தபோது எண்ணற்ற சிரமங்களையும், தொந்தரவுகளையும் எதிர்கொண்டார்.
அந்த நேரத்தில், அவரது தாயார் விபத்து ஏற்பட்டு, சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சுவாமிஜி அதைப்பற்றி எதுவும் கவனம் கொள்ளாமல் தொடர்ந்து சிவகாளினி தேவியின் மந்திரங்களை உச்சரித்து கடும் தவம் செய்துவந்தார்.
தவத்தின் பலனாக, இறுதி நாளன்று, நடுஇரவில் சிவகாளினி தேவி உக்ர கோலத்தில் சுவாமிஜி முன்பு தோன்றினார். சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, கண்களில் ஆனந்த கண்ணீர் வர வார்த்தைகளற்ற நிலையில் நின்றார். அப்போது அன்னை, காமகாசூரன் என்ற கொடிய அரக்கனை சம்ஹாரம் செய்த இடமான சித்தஞ்சி என்ற தவபூமியில் சிவகாளினி ஆலயம் அமைத்து, மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், உலக அமைதி மற்றும் நன்மைக்காகவும், சுவாமிஜிக்கு அற்புத வரங்களை அளித்து மறைந்தார்.
சிவகாளினி தேவியின் அருளாசியுடன் சித்தஞ்சி கிராமத்தில் சுவாமிஜி அவர்கள் 1999-இல் “சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம்” தொடங்கினார். அதன் பின்னரே சுவாமிஜி அவர்கள் “தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள்” என்று அழைக்கப்பட்டார்.
பீடம் ஆரம்பித்து, இதுநாள் (2016) வரை 17 ஆண்டுகளாக லட்சக்கணக்கான பக்தர்களின் பிரச்சனைகளையும், மனக்கவலைகளையும், கண்ணீரையும், துன்பங்களையும் தீர்த்து வருகிறார். அதனால், பக்தர்கள், சுவாமிஜியை “தவத்திரு அடிகளார்”, “தவயோகி”, “சத்குரு”, மற்றும் “சித்தஞ்சி அம்மா” என அன்புடன் அழைக்கிறார்கள்.
மேலும், இப்பீடம் சுவாமிஜி அவர்களின் உடன்பிறந்த சகோதரர் பீடத்தின் தலைவர், திரு. சுரேஷ்குமார் அவர்களால் சிறப்பாக நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
ஓம் காளி சரணம் !